எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஆலியா பட் கலந்து கொள்ளவிருப்பதும் இன்னும் தள்ளிப் போயிருக்கிறது.
'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஆலியா பட் நடிக்கவிருக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாதில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 'கங்குபாய் கதியாவாதி' என்கிற திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை முடிக்க முழு வீச்சில் பன்சாலி உழைத்து வருவதால், இன்னும் 2 வாரங்கள் இந்தப் படப்பிடிப்பை நீட்டித்துள்ளார். நவம்பர் 15 வரை தற்போதைய படப்பிடிப்பு நீள்கிறது.
எனவே இது முடிந்த பிறகே ஆலியாவால் ’ஆர் ஆர் ஆர்’ படப்பிடிப்புக்குச் செல்ல முடியும். இதனால் ஏற்கெனவே கரோனா நெருக்கடியால் தள்ளிப் போன இந்தப் படப்பிடிப்பு தற்போது இன்னும் தள்ளிப் போகிறது. இந்தப் படத்தில் ஆலியா கவுரவத் தோற்றதிலேயே நடிப்பதாகவும், ஒரு பாடலைப் பாடவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
’கங்குபாய் கதியாவாதி’ மும்பையில் ஒரு காலத்தில் வாழ்ந்த கங்குபாய் என்கிற பாலியல் தொழிலாளியைப் பற்றிய உண்மைக் கதை என்பது குறிப்பிடத்தக்கது.