தென்னிந்திய சினிமா

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர் கதாபாத்திரத்தின் டீஸர் வெளியீடு

செய்திப்பிரிவு

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கதாபாத்திரத்தின் அறிமுக டீஸர் வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த அக். 6 ஆம் தேதி அன்று மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கதாபாத்திரத்தின் அறிமுக டீஸர் வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இதில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் பீம் என்ற கதாபாத்திரத்தின் சில காட்சிகளைக் கோத்து 1.30 நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

முன்னர் வெளியிடப்பட்ட ராம் சரண் கதாபாத்திரத்துக்கான அறிமுக வீடியோவில் ஜுனியர் என்.டி.ஆர் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். அந்த வகையில் இன்று வெளியாகியிருக்கும் ஜுனியர் என்.டி.ஆர் அறிமுக வீடியோவுக்கு ராம் சரண் குரல் கொடுத்துள்ளார்.

கடந்த மே 20-ம் தேதி ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திர வீடியோ வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். ஆனால், பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களாலும், கரோனா அச்சுறுத்தலாலும் வீடியோவை வெளியிட முடியவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர், இதனால் வருத்தத்தில் இருந்த ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் தற்போது இந்த டீஸரால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெளியான சில நிமிடங்களிலேயே இந்த வீடியோ பல லட்சம் முறை பார்க்கப்பட்டு இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

SCROLL FOR NEXT