தென்னிந்திய சினிமா

'மஹா சமுத்திரம்' படத்தின் நாயகியாக அதிதி ராவ் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சித்தார்த், சர்வானந்த் நடிப்பில் உருவாகவுள்ள 'மஹா சமுத்திரம்' படத்தின் நாயகியாக அதிதி ராவ் ஹைதரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கில் கார்த்திகேயா, பாயல் ராஜ்புத் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'ஆர்.எக்ஸ்.100'. இப்படத்தின் இயக்குநர் அஜய் பூபதி இயக்கவுள்ள புதிய படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சித்தார்த்.

'மஹா சமுத்திரம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகவுள்ளது. காதல் கலந்த ஆக்‌ஷன் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் நாயகியாக யார் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக அதிதி ராவ் ஹைதரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'ஆர்.எக்ஸ்.100' வெற்றிக்குப் பிறகு அஜய் பூபதி இயக்கும் இரண்டாவது படம் என்பதால் இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2013-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஜபர்தஸ்த்' படத்துக்குப் பிறகு சித்தார்த் நடிக்கும் நேரடி தெலுங்குப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT