தென்னிந்திய சினிமா

தெலங்கானா கிராமத்தை தத்தெடுக்க பிரகாஷ் ராஜ் முடிவு

ஐஏஎன்எஸ்

தெலங்கானாவில் மஹபூப் நகர் மாவட்ட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க நடிகர் பிரகாஷ் ராஜ் முன்வந்துள்ளார்.

இது குறித்து பஞ்சாயத் ராஜ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தாரக் ராமா ராவிடம் பேசிய பிரகாஷ் ராஜ், மஹபூப் மாவட்டத்திலுள்ள கொண்டாரெட்டிபள்ளி என்ற கிராமத்தை தத்தெடுக்கும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அண்மையில் அறக்கட்டளை ஒன்றை தன் பெயரில் துவங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ், அதன் மூலமாக கிராமத்தின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை வைத்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இதை தெரிவித்துள்ள அமைச்சர் ராமா ராவ், பிரகாஷ் ராஜின் இந்த முயற்சியை பாரட்டியுள்ளதோடு, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதேவி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சைய்யாவிடம் பிரகாஷ் ராஜை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அந்த கிராமத்தில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு விவசாயம் செய்யப் போவதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை, அரசாங்கத்தின் உதவியோடு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தனது அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் அந்த கிராமத்தில் ஆய்வு செய்த பின்னர் முழு திட்டங்கள் தெரிவிக்கப்படும் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக கடந்த மாதம்,தெலங்கானா அரசால் ஆரம்பிக்கப்பட்ட கிராம ஜோதி திட்டத்தை பாராட்டியுள்ள பிரகாஷ் ராஜ், தனது அறக்கட்டளை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதே போல, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் கடந்த மாதம் மஹபூப் நகரிலுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்கவுள்ளதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT