தென்னிந்திய சினிமா

தொழிலதிபர் அஷ்வின் ஃபிலிப் - மியா ஜார்ஜ் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

எர்ணாகுளத்தில் தொழிலதிபர் அஷ்வின் ஃபிலிப்க்கும், நடிகை மியா ஜார்ஜ்க்கும் திருமணம் முடிந்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

2010-ம் ஆண்டு மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் மியா ஜார்ஜ். அதற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்தார். 2014-ம் ஆண்டு 'அமர காவியம்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை', 'ஒருநாள் கூத்து', 'வெற்றிவேல்', 'ரம்', 'யமன்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். இன்னொரு பக்கம் தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் ஃபிலிப் என்கிற தொழிலபதிருடன் மியா ஜார்ஜுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெற்றோர் நிச்சயித்த இந்த திருமண நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செப்டம்பரில் திருமணம் நடைபெறும் என்று அறிவித்தார்கள்.

சில தினங்களாகவே திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தன. இன்று (செப்டம்பர் 12) எர்ணாகுளத்தில் உள்ள கிறிஸ்துவ தேவலாயத்தில் மதியம் 2:30 மணியளவில் அஷ்வின் ஃபிலிப் - மியா ஜார்ஜ் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்பட்டது.

அஷ்வின் ஃபிலிப் - மியா ஜார்ஜ் திருமணத்துக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கரோனா அச்சுறுத்தலால் இந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டார்கள். திருமண வரவேற்பு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

தற்போது தமிழில் விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார் மியா ஜார்ஜ். அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT