பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தடை செய்யப்பட்ட எம்டிஎம்ஏ., எல்எஸ்டி உள்ளிட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்த கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி. போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கன்னட திரைப்பட இயக்குநரும், பத்திரிகையாளருமான இந்திரஜித் லங்கேஷிடம் குற்றப்பிரிவு போலீஸார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.விசாரணையின் முடிவில் தனக்கு தெரிந்த 15 கன்னட திரையுலகினரின் பெயர்களை போலீஸாரிடம் கூறி இருப்பதாகவும், சமூகத்துக்கு அழிவை ஏற்படுத்தும் போதைப் பொருளை பயன்படுத்தும் கன்னட திரையுலகினருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் இந்திரஜித் லங்கேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திரஜித் லங்கேஷிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கடந்த 04.09.20 அன்று நடிகை ராகினி திவேதியை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
மேலும் கன்னட சினிமாவின் முன்னனி நடிகையும், நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணிக்கும் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இன்று நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் முடிவில் சஞ்சனா கல்ராணி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது.