நீங்கள் தான் என் அமைதி, என் ஞானி என்று அப்பாவுக்கு துல்கர் சல்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். இதனால் இவருக்கு அனைத்து திரையுலகின் முன்னணி நடிகர்களும் பழக்கம். அனைவருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தவர்.
இன்று (செப்டம்பர் 7) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் மம்முட்டி. இதனைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான், பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"என் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். எனக்குத் தெரிந்த மிக ஒழுக்கமான, விவேகமுள்ள மனிதர். எதற்காக வேண்டுமானாலும் நான் உதவி நாடக்கூடிய ஒருவர். நான் சொல்வதை பொறுமையாகக் கேட்டே என்னைச் சாந்தப்படுத்தும் ஒருவர். நீங்கள் தான் என் அமைதி, என் ஞானி. உங்களின் அற்புதமான தரத்துக்கு நிகராக வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன்.
உங்களுடன் செலவிடக் கிடைத்த இந்த நேரம் எங்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். என் மகளுடன் உங்களைப் பார்த்தது தான் எனக்குக் கிடைத்த மிக உயரிய பரிசு. மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. நீங்கள் இன்னும் இளமையாகிக் கொண்டிருக்கும் வேளையில் வரும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக இருக்க வேண்டும். எல்லையில்லாமல் உங்களை நேசிக்கிறோம்"
இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.