பெங்களூரு நகரின் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்யச் சென்றபோது தானும், தனது நண்பர்களும் தாக்கப்பட்டதாகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா ரெட்டி என்பவரால் கடுமையாக ஏசப்பட்டதாகவும் நடிகை சம்யுக்தா ஹெக்டே புகார் தெரிவித்துள்ளார்.
தமிழில் 'வாட்ச்மேன்', 'கோமாளி', 'பப்பி' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை சம்யுக்தா. சமீபத்தில் இவரும் இவர் நண்பர்களும் பூங்காவில் உடற்பயிற்சி செய்யச் சென்றுள்ளனர். இவர்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்துள்ள கவிதா ரெட்டி, இவர்களை நோக்கித் திட்டியபடியே, நீங்கள் கவர்ச்சி நடனமாடுபவர்களா என்று கேட்டுத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
"எங்கள் மூன்று பேர் அருகில் வந்த கவிதா ரெட்டி, நாங்கள் தவறான உடை அணிந்துள்ளோம் என்றும், உடற்பயிற்சிக்குப் பதிலாக கவர்ச்சி நடனம் ஆடுவதாகவும் சொன்னார். மேலும் தற்போது கன்னடத் திரையுலகில் சர்ச்சையாகியுள்ள போதை மருந்து விவகாரத்தில் எங்கள் பெயரைச் சேர்ப்பதாகவும் கூறினார்.
நான் கவர்ச்சியாக உடை அணியவில்லை. மேல் சட்டை இருந்தது. இங்கு வந்ததும் அதைக் கழட்டிவிட்டு நான் உடற்பயிற்சி ஆரம்பித்தேன். திடீரென அங்கு வந்த கவிதா ரெட்டி, நாங்கள் அநாகரிகமாக உடை அணிந்திருப்பதாகக் கூறினார். ஆனால், நான் விளையாட்டு வீராங்கனைகள் அணியும் ஆடையைத்தான் அணிந்திருந்தேன். கவிதா ரெட்டியைத் தொடர்ந்து அங்கிருந்த சிலர் நாங்கள் போதை மருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்ட ஆரம்பித்தனர்.
கவிதா ரெட்டியுடன் நாங்கள் அமைதியாகப் பேசியும் அவர் என் தோழியை அடித்தார். தவறாகப் பேசினார். நாங்கள் காவல்துறையினர் வரக் காத்திருந்தோம். அதற்குள் அங்கு வந்த 10 ஆண்கள் எங்களை அச்சுறுத்த ஆரம்பித்தனர். காவல்துறையினர் வந்த பிறகும் அவர்கள் முன்னிலையிலேயே எங்கள் வேலைவாய்ப்பை நசுக்கி விடுவதாகச் சொனனர்கள். ஆனால், காவல்துறையினர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் தான் எனது சமூக வலைதளப் பக்கத்தில் நேரலையில் பகிர ஆரம்பித்தேன்" என்று சம்யுக்தா கூறியுள்ளார்.
மேலும், காவல் நிலையத்தில் இரு தரப்புமே ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். தங்களுக்கு ஆதரவு வேண்டும் என்று கோரி சம்யுக்தா பதிவிட்டுள்ளார்.
கவிதா ரெட்டி பேசுகையில், சம்யுக்தாவும் அவரது நண்பர்களும் பூங்காவில் இருந்தவர்களைத் தொந்தரவு செய்யும் வகையில் சப்தமாக இசை வைத்து உடற்பயிற்சி செய்ததாகவும், அதைக் கேட்டபோது தன்னை அசிங்கமாகப் பேசிய பிறகுதான் கடுமையாக நடந்து கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.