'பிரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.
'பிரேமம்' வெற்றிக்குப் பிறகு இப்போது வரை அல்போன்ஸ் புத்திரன் அடுத்த படத்துக்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். இடையே அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. ஆனால், அதிகாரபூர்வமாக எதுவும் உறுதியாகாமல் இருந்தது.
சுமார் 5 ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படத்தில் ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இது தொடர்பாக அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
"எனது அடுத்த திரைப்படத்தின் பெயர் 'பாட்டு'. ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கிறார். யுஜிஎம் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பு. இம்முறை நான் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளேன். திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்படும். படத்தின் மற்ற நடிகர், நடிகையர், குழு பற்றிய விவரத்தை படம் எடுக்கப்படும்போது பகிர்கிறேன்".
இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
'நேரம்', 'பிரேமம்' படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் பல படங்களுக்கு எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது 'பாட்டு' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.