போதை மருந்துகளைப் பயன்படுத்தியதற்காக கன்னட நடிகை ராகினியை கர்நாடக மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
"தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களைப் பயன்படுத்தியது தொடர்பாகவும், போதை மருந்து விற்பவர்களுடன் இருக்கும் தொடர்புக்காகவும், கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்கக் கேள்வி கேட்டு விசாரித்தபின், நடிகை ராகினியை நாங்கள் கைது செய்துள்ளோம்.
ராகினியைக் காவலில் எடுத்து விசாரிக்க மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர் செய்யப்படுவார். பல மாதங்களாக நகரத்தில் நடந்த போதை மருந்து பார்ட்டிகளில் அவர் போதை மருந்து பயன்படுத்தியது குறித்து விசாரிக்கப்படும்" என்று பெங்களூரு காவல்துறை இணை ஆணையர் சந்தீப் பட்டீல் கூறியுள்ளார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று, ஒரு பெண் காவல்துறை ஆய்வாளர் உட்பட 7 குற்றப் பிரிவு அதிகாரிகள், ராகினியின் வீட்டைச் சோதனையிட்டனர். தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் அவர் வீட்டில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள பெங்களூரு நகரின் வடக்கே இருக்கும் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ராகினியின் வீட்டில் இந்தச் சோதனை நடந்தது.
பிரபலங்களுக்கு பார்ட்டிகளில் போதை மருந்து விநியோகம் செய்தது தொடர்பாக புதுடெல்லியில் இருக்கும் விரேன் கண்ணா என்பவரையும் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடக காவல்துறை அதிகாரிகளோடு விரேன் பெங்களூருவுக்கு வரவழைக்கப்படவுள்ளார்.
போதை மருந்து விற்று வந்த ரவிஷங்கர் மற்றும் ராகுல் ஷெட்டி ஆகிய இருவரையும் முறையே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். மரிஜுவானா, கேனபிஸ், கொக்கைன், ஹாஷிஷ் போன்ற தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை, கன்னடத் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும், இன்னும் சில பிரபலங்களும் கலந்துகொண்ட பார்ட்டிகளில் விநியோகம் செய்தது தொடர்பான வழக்கில் இதுவரை மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதான நடிகை ராகினி 2009-ம் ஆண்டு கன்னடத் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து 'கெம்பே கவுடா', 'ராகினி ஐபிஎஸ்', 'பங்காரி' ஆகிய படங்கள் மூலம் பிரபலமடைந்தார். தமிழில் 'நிமிர்ந்து நில்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.