தென்னிந்திய சினிமா

மருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2

செய்திப்பிரிவு

தனது மருத்துவ சிகிச்சை இருப்பதால் திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சஞ்சய் தத் அறிவித்திருப்பதால், 'கே.ஜி.எஃப் 2' படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எஃப்'. யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதர மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டது.

பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த இந்தப் படத்தின் கதை முதல் பாகத்துடன் முடிவடையவில்லை. அதன் 2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் யாஷுடன் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதில் சில காட்சிகளும் மற்றும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றும் படமாக்க வேண்டியதுள்ளது. அதிலும் யாஷ் - சஞ்சய் தத் மோதும் மிக முக்கியமான சண்டைக் காட்சியாகும். தற்போது மருத்துவ சிகிச்சைக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சஞ்சய் தத் அறிவித்துவிட்டார். இதனால் சிக்கலில் மாட்டியுள்ளது 'கே.ஜி.எஃப் 2' படக்குழு.

ஏனென்றால் அவர் இல்லாமல் டூப் வைத்து சண்டைக் காட்சியை முடிக்க முடியாது. சஞ்சய் தத்துக்கு சிகிச்சை முடிந்து மீண்டும் எப்போது நடிக்கத் தொடங்குவார் என்பதும் தெரியாது. இதனால் என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு. சஞ்சய் தத் வரும் வரை காத்திருப்பார்களா அல்லது சஞ்சய் தத்துக்கு பதில் வேறொரு நடிகரை நடிக்க வைத்து முழுக்க மீண்டும் படப்பிடிப்பு செய்வார்களா என்பது விரைவில் தெரியவரும்.

ஏற்கெனவே அக்டோபர் 23-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துவிட்டது 'கே.ஜி.எஃப் 2' படக்குழு. தற்போது அது சாத்தியமா என்பது விரைவில் தெரியவரும்.

SCROLL FOR NEXT