கரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு விட்டதாக இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் உலகம் முழுவதும் பிரபலமான இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜமெளலி. தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கான், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முழுமையாக முடிவடைந்தவுடனே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஜூலை 29-ம் தேதி ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டார் ராஜமெளலி. இன்று (ஆகஸ்ட் 12) 14 நாட்கள் தனிமை முடிந்து, கரோனா அச்சுறுத்தலிலிருந்து முழுமையாகக் குணமாகியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் ராஜமெளலி கூறியிருப்பதாவது:
"இரண்டு வாரத் தனிமைக் காலத்தை முடித்துவிட்டேன். எந்த அறிகுறிகளும் இல்லை. பரிசோதனை எடுக்க வேண்டுமே என்று எடுத்தேன். எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. ப்ளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடீஸ் எங்கள் உடலில் உருவாகியுள்ளதா என்பதைப் பார்க்க மருத்துவர் எங்களை 3 வாரங்கள் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்"
இவ்வாறு ராஜமெளலி தெரிவித்துள்ளார்.