அனுஷ்கா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அருந்ததி' திரைப்படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளது.
கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா, சோனு சூட், சாயாஜி ஷிண்டே, மனோரமா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அருந்ததி'. 2009-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே அனுஷ்கா, சோனு சூட் இருவருமே பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் மட்டுமன்றி தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது.
ஆனால், இந்த முறை இந்தி ரீமேக் செய்யும் பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் இந்தி ரீமேக் உரிமையை அல்லு அர்விந்த் வைத்துள்ளார். இதில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பவர் யார் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகின.
சில தினங்களுக்கு முன்பு அனுஷ்கா கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை யாருமே உறுதிப்படுத்தவில்லை. இந்தி ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இயக்குநர், நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.