தெலுங்கு திரைப்பட உலகில் தசரா சீசன் மிக முக்கியமானது. இந்த சீசனில் தங்களது படங்களை வெளியிட பல முன்னணி கதாநாயகர்கள் விரும்புவார்கள். ஆனால் இந்த முறை தசரா நெருங்கினாலும், இதுவரை எந்த கதாநாயகர்களும் தங்கள் படங்களை வெளியிடுவது குறித்து அறிவிப்பு வெளியிடாமல் உள்ளனர். இதற்கு காரணம் ‘ருத்ரமாதேவி’.
‘பாகுபலி’க்கு அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘ருத்ரமாதேவி’. குணசேகரின் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள இப்படம் வெளியான பிறகு தங்கள் படத்தை வெளியிடலாம் என்று தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் காத்திருக் கிறார்கள்.
‘ருத்ரமாதேவி’ காக்கதீயர்கள் ஆட்சி கால சரித்திரப்படம் என கூறப் படுகிறது. இதில் பிரபல கதாநாயகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ராணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அருந்ததி போன்று நல்ல பெயர் வாங்கி தரும் கதாபாத்திரம் இப்படத்தில் தனக்கு அமைந்துள்ளதாக அனுஷ்கா கூறி உள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ள இப்படம் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடித்துள்ள ‘புரூஸ் லீ’ திரைப்படம் உட்பட பல படங்களை தாமதமாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.