தங்கக் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவருடைய நிதியைக் கொண்டு 'மாயநதி' படம் தயாரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது தொடர்பாக என்ஐஏ விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், மலையாளத் திரையுலகிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல தயாரிப்பாளர்களுடைய பெயர்கள் இந்த விவகாரத்தில் அடிபட்டு வருகின்றன. இதில் தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லாவும் ஒருவர்.
ஆஷிக் அபு இயக்கத்தில் டொவினோ தாமஸ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்த 'மாயநதி' படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர். இதனை வைத்து, 'தங்கக் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒருவருடைய நிதிதான் 'மாயநதி' படத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் செய்தி வெளியானது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"என்னுடைய தயாரிப்பான 'மாயநதி' திரைப்படம் யாரோ ஒரு சர்ச்சைக்குரிய நபரால் நிதியுதவி செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த அடிப்படையில் இதுபோன்ற போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன என்று எனக்குப் புரியவில்லை. 'மாயநதி' திரைப்படம் என்னுடைய சொந்த வங்கிக் கணக்கிலிருந்து அனைத்து வரிகளும் செலுத்தித் தயாரிக்கப்பட்டது".
இவ்வாறு சந்தோஷ் டி.குருவில்லா தெரிவித்துள்ளார்.