தென்னிந்திய சினிமா

பிரபாஸுக்கு நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

'சாஹோ' படத்தைத் தொடர்ந்து, ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் 'ராதே ஷ்யாம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது. அந்நிறுவனத்தின் 50-வது ஆண்டு என்பதால் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

'மஹாநடி' என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நாக் அஷ்வின் இயக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாக பிரபாஸ் - நாக் அஷ்வின் படம் அமைந்துள்ளது.

பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகியோருடன் முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்கவுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT