'இஸ்மார்ட் ஷங்கர்' வெளியாகி ஓராண்டு ஆனதை முன்னிட்டு வெளியிட்டுள்ள ட்வீட்களில், ஆற்றலைத் திரும்பப் பெற்றேன் என்று பூரி ஜெகந்நாத் தெரிவித்துள்ளார்.
ராம், நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வெளியான படம் 'இஸ்மார்ட் ஷங்கர்'. பூரி ஜெகந்நாத் இயக்கி, தயாரித்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல்ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இன்று (ஜூலை 18) இந்தப் படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் அனைவருமே தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.
ஓராண்டு நிறைவை முன்னிட்டு இயக்குநர் பூரி ஜெகந்நாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'இஸ்மார்ட் ஷங்கர்' திரைப்பட வெற்றியின் மூலம் நான் எனது வாழ்க்கையில் ஆற்றலைத் திரும்பப் பெற்றேன். என்னை நம்பிய நடிகர் ராமுக்கு மனமார்ந்த நன்றி. உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம் போல இருந்தது. உங்களை நேரில் சந்தித்து, இறுக்கமாக அணைத்து மீண்டும் நன்றி சொல்லக் காத்திருக்கிறேன்.
ஒரு வருடத்துக்கு முன்னால் இதே நாள் திருவிழாவைப் போல இருந்தது. அதிகமாக கடின உழைப்புத் தரும் எனது தயாரிப்பாளர் சார்மிக்கு மிக்க நன்றி. நீங்கள் இஸ்மார்ட் ஷங்கரை மிகப்பெரிய வெற்றியாக்க வேண்டும் என்று தீர்மானமாக இருந்தீர்கள். என் இனிய நிதி அகர்வால், நாபா நடேஷ், சத்ய தேவ் மற்றும் ஒட்டுமொத்தக் குழுவுக்கும் என் அன்பு".
இவ்வாறு பூரி ஜெகந்நாத் தெரிவித்துள்ளார்.
பூரி ஜெகந்நாத்தின் ட்வீட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் ராம் தனது ட்விட்டர் பதிவில், "உங்களைச் சந்தித்து என் கண் முன்னால் நீங்கள் ’இஸ்மார்ட் ஷங்கர்’ உருவாக்குவதைப் பார்த்தது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு அனுபவம். வேறு யாரும் பார்த்திராத வகையில் என்னைப் பார்த்ததற்கு நன்றி. உங்களுக்கு என் அன்பு. உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.