கரோனாவும் லாக்டவுனும் நம்முடைய வாழ்க்கையை மட்டுமல்லாமல், திரைத்துறை உலகையும் வெகுவாக மாற்றிவிட்டது. வெள்ளித்திரையில் மிகுந்த கொண்டாட்டத்துடன் வெளியாகும் திரைப்படங்கள், இன்று சத்தமின்றி ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகின்றன. கடந்த மாதம் அமேசான் பிரைமில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ ஓடிடியில் வெளியான முதல் தமிழ்ப்படம். இந்த வகையில் மலையாளத்தின் முதல் படமாக ‘சூபியும் சுஜாதாயும்’ கடந்த வாரம் வெளியானது.
தொலைந்த ஆன்மா
கடவுளுக்கு நெருக்கமானது காதல். ஆன்மிகத்துக்கு நெருக்கமானது இசை. கடவுளின் மீதான மட்டற்ற காதலை, அர்த்தம் பொதிந்த வார்த்தைகளுக்குள் அடக்கி, அதைக் காதலில் ததும்பி வழியும் இசையின் வழியாக வெளிப்படுத்தி, மெய் நிலை அடைய முயல்வதே சூஃபி முறை. ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமல்ல; காதலர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் அதன் மீது அலாதிப் பிரியம் உண்டு. இத்தகைய சூஃபியைத் தனது பெயரில் கொண்டிருக்கும் இந்தக் காதல் படம் ஆன்மாவைத் தொலைத்துப் பரிதாபமாக நிற்பது துரதிர்ஷ்டமே.
இந்து-முஸ்லிம் காதல்
உயர் சாதியைச் சேர்ந்த, பேசும் திறனற்ற, அழகான இளம் பெண்ணான சுஜாதா (அதிதி ராவ் ஹைதரி) ஒரு சூஃபி துறவியைக் (தேவ் மோகன், அறிமுகம்) காதலிக்கிறார். சாதி, மதம் எனப் பிரிவினைகள் தலைவிரித்தாடும் இன்றைய காலகட்டத்தில், கலவரத்தை ஏற்படுத்த இரு மதத்தினருக்கு இடையே காதல் என்ற கிசுகிசுப்பே போதுமானது. இந்தச் சூழலில், இந்து-முஸ்லிம் காதல் ஜோடியைக்கொண்ட இந்தப் படம் உயிர்ப்புடனும் விறுவிறுப்புடனும் இருந்திருக்க வேண்டாமா? சூஃபியை விட்டுவிடலாம், ஒரு சாதாரணக் காதல் படத்துக்கான குறைந்தபட்ச எதிர்பார்ப்பைக்கூட இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை.
லவ் ஜிகாத்
சுஜாதாவுக்குப் பேசும் திறன் கிடையாது. கேட்க மட்டுமே முடியும். சூஃபி துறவியின் மெல்லிய வசீகரிக்கும் குரலில் ஒலிக்கும் ஆஸான், சுஜாதாவின் செவியில் நுழைகிறது. அந்த ஈர்ப்பினால், அவள் இதயத்தில் காதலும் நுழைகிறது. முக்கோணக் காதலுக்காக என்று, துபாயில் வசிக்கும் ரவீந்திரன் (ஜெயசூர்யா) கதாபாத்திரம் வேறு திணிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று, ‘லவ் ஜிகாத்’ என்று வேறு உள்ளது. அதாவது, ஒரு நல்ல காதல் படத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இந்தக் கதையில் உள்ளன.
‘லவ் ஜிகாத்’ என்ற கருத்தியல் கேரளாவில் மிகவும் பிரபலமான ஒன்று. மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதும் கூட. இந்த ‘லவ் ஜிகாத்’ குறித்து மலையாளத் திரையுலகம் பெரிய அளவில் பேசவில்லை என்பதே இன்றளவும் உண்மை. ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட, 2016-ல் வெளியான ‘கிஸ்மத்’ படம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. ‘சூபியும் சுஜாதாயும்’, ‘கிஸ்மத்’ மாதிரியான படமுமல்ல; ‘லவ் ஜிகாத்’ பற்றிப் பேசுவதும் அதன் நோக்கமல்ல.
இசைப் பயணம்
கேரளா – கர்நாடக எல்லைக்கு அருகிலிருக்கும் ஒரு சிற்றூரில் நிகழும் காதலை இசையின் வழி சொல்ல முயல்வதே இந்தப் படம். பழமையின் அழகில் மிளிரும் அந்த ஊரையும் அதன் பசுமையையும் கண்ணில் ஒற்றும்படியான அழகுடன் ஒளிப்பதிவாளர் அனு மூத்தேதாது காட்சிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்துக்கு அற்புதமான இசையை எம்.ஜெயச்சந்திரன் அமைத்துக் கொடுத்திருக்கிறார். சொல்லப்போனால், ஒளிப்பதிவும் இசையும்தாம் இந்தப் படத்துக்குத் தூண்கள். ‘வாதிக்கல வெள்ளரிபாவு’ பாடல், செவிக்கு இனிமையையும் மனத்துக்கு அமைதியையும் அளிக்கிறது. இந்தப் பாடலில் இருக்கும் நேர்த்தியும் ஜீவனும் மற்ற பாடல்களில் இல்லை. படத்தின் பின்ணனி இசை அவ்வப்போது ‘எண்டே நின்னே மொய்தீன்’ படத்தை நினைவூட்டினாலும், அதுவே இந்தப் படத்தின் பெரும் பலம்.
அந்நியமான நாயகி
நாயகி அதிதி மிகவும் அழகாகக் காட்டப்பட்டு இருந்தாலும், படத்தின் கதாபாத்திரத்துக்கு அந்நியமாகவே இருக்கிறார். ஒரு தேர்ந்த நடிகையாக இருந்தும் கூட, சுஜாதா கதாபாத்திரத்துக்குத் தேவையான நம்பகத்தன்மையையும் உறுதியையும் அவர் அளிக்கத் தவறிவிட்டார். வண்ணமயமான தலைப்பாகையுடனும் முகம் நிறைந்த தாடியுடனும் தோன்றும் தேவ் மோகனும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கிறார். அறிமுக நடிகரான அவர், இந்தப் படத்துக்காக ஒன்பது மாதங்கள் பயிற்சி பெற்றிருக்கிறார். அரபியும் பயின்றிருக்கிறார். ஆனால், அழகும் பயிற்சியும் மட்டும் போதுமா? கதாபாத்திரம் நேர்த்தியாக வடிவமைக்கப்படாததால், இவருடைய உழைப்பு, விழலுக்கு இறைத்த நீராகவே உள்ளது.
வலுவற்ற திரைக்கதை
மிகுந்த நம்பிக்கை அளிக்கும் கதையையும், அதன் களத்தையும், அற்புதமான இசையையும், அழகான காட்சிகளையும், ஒன்றிணைக்க ஒரு ஜீவனுள்ள திரைக்கதையைத் தர இயலாமல் நமது பொறுமையை வெகுவாகச் சோதிக்கிறார், இயக்குநரும் கதாசிரியருமான ஷாநவாஸ். இந்தப் படத்தில் திரைக்கதை மட்டுமல்ல; கதாபாத்திரங்களும் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் இயற்கைக்கு வெகு தொலைவில், செயற்கையே அதன் இயல்பாக இருக்கும்விதமாக உள்ளன.
ஆன்மிகப் பயணத்தின் நடுவே காதலில் வீழும் சூஃபி துறவியின் ஆழ்மனக் குழப்பங்களையும், கண்டவுடன் காதலில் மூழ்கும் உயர்சாதிப் பெண்ணின் பிரச்சினைகளையும் மேம்போக்குடன் அணுகியிருக்கும் விதத்தால், இறுதிவரை இந்தப் படத்துடன் நமக்கு எவ்விதப் பிணைப்பும் ஏற்படவில்லை. திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால், இந்தப் படம் நமக்கு ஓர் அற்புதமான அனுபவமாக இருந்திருக்கக்கூடும். ஆனால், அற்புதங்கள் எப்போதும் நிகழ்வது இல்லையே.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in