‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீது மோகன்தாஸ். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து வெளியான ‘நள தமயந்தி’ படத்தின் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். கடந்த ஆண்டு நிவின் பாலியை வைத்து ‘மூத்தோன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘மூத்தோன்’ படத்தில் பணிபுரிந்த போது தனக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை தரவில்லை என்று ஆடை வடிவைப்பாளர் ஸ்டெஃபி சேவியர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கீது மோகன்தாஸ் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
ஸ்டெஃபி சேவியரின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கீது தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் முன்கோபம் கொள்ளக்கூடிய நபராக, கடினமான தொனியில் பேசக் கூடியவராக இருக்கலாம், ஆனால் ஸ்டெஃபி கூறும் விஷயங்கள் முற்றிலும் தவறானவை. ‘மூத்தோன்’ படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் மேக்ஸிமா பாசு. அவர் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே ஸ்டெஃபி ஆடை வடிவைப்பாளராக பணிபுரிந்தார். அவர் என்னுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.
உங்களிடம் சிறந்த முறையில் வேலை வாங்காதது என்னுடைய தவறுதான் என்று நான் நம்புகிறேன். நம்முடைய கூட்டணி சிறப்பானதாக இல்லையென்பதும், நீங்கள் படத்துக்குள் வந்ததிலிருந்து சென்றவரையிலான சம்பவங்கள் அனைத்துக்கும் என் படக்குழுவினர் அனைவரும் சாட்சி.
படத்தை விட்டு நீங்கள் வெளியேறியிருந்தாலும் சம்பளம் கொடுக்கும் வரை ஆடைகள் திரும்பக் கொடுக்கப்படாது என்று உங்கள் உதவியாளர் தெரிவித்தார். மேலும் உங்களுடைய யோசனைகள் எதுவும் படத்தில் பயன்படுத்தப்பட வில்லை. உங்கள் உதவியாளர் கொடுத்த காலக்கெடுவுக்குள்ளேயே எங்கள் தயாரிப்பாளர் உங்களுக்கான தொகை முழுவதையும் கொடுத்துவிட்டார். நான் உங்களை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தேன். ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை.
நிச்சயமாக இரு பெண்களுக்கிடையே இப்படி நடக்க கூடாது. உங்களை என்னுடை செயல்பாடுகள் கஷ்டப்படுத்தியிருந்தால் நான் உங்களிடம் நேரில் உரையாட தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு கீது மோகன்தாஸ் கூறியுள்ளார்.