தென்னிந்திய சினிமா

இளைஞர் காங்கிரஸ் போராட்டம்: மலையாள நடிகர் சங்கக் கூட்டம் ரத்து

ஐஏஎன்எஸ்

மலையாளத் திரையுலகின் அம்மா அமைப்பின் நிர்வாகக் குழு முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்கச் சந்தித்தது. கொச்சியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.

மலையாளத் திரைப்பட நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பின் சந்திப்பு கொச்சியில் ஒரு ஹோட்டலில் நடந்தது. ஆனால், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்த கரோனா கட்டுப்பாடு மண்டலத்தில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. எனவே, விதிகளை மீறி இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டதால் இளைஞர் காங்கிரஸ் தரப்பு இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.

அம்மா அமைப்பின் தலைவர் நடிகர் மோகன்லால், சென்னையில் அவரது இல்லத்திலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். ஒரு சிலர் மட்டுமே நேரடியாக இதில் பங்கேற்றனர். பல்வேறு செய்தித் தொலைக்காட்சிகளும் இந்தச் சந்திப்பு குறித்து செய்திகள் ஒளிபரப்பியதால் அந்த ஹோட்டலின் வாசலில் கூடிய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தைத் தொடங்கினர். சிறிது நேரத்தில் காவல்துறை அங்கு வர, சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

அம்மா அமைப்பின் பொதுச் செயலாளர் எடவேலா பாபு பேசுகையில், "குழு உறுப்பினர்கள் ஒரு சிலர்தான் வந்திருந்தனர். மற்ற அனைவரும் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கலந்துகொண்டனர். அந்தப் பகுதியில் தடை இருக்கிறது என்பது தெரிந்தவுடன் நாங்கள் உடனடியாகச் சந்திப்பை ரத்து செய்து இன்னொரு தேதிக்கு ஒத்திவைத்தோம். மேலும் அந்த இடம் கட்டுப்பாடு மண்டலம் என்பதே எங்களுக்கு நள்ளிரவுக்கு மேல்தான் தெரியவந்தது" என்று கூறினார்.

அந்த ஹோட்டலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உள்ளூர் அரசு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT