தென்னிந்திய சினிமா

'அய்யப்பனும் கோஷியும்' இயக்குநரின் சிகிச்சைக்காக இணையும் திரையுலக நண்பர்கள்

ஐஏஎன்எஸ்

'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படத்தின் இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து, அவருக்கு எப்படி சிறப்பான மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை செய்வது என நடிகர்கள் ப்ரித்விராஜ், பிஜு மேனன் உள்ளிட்ட திரையுலக நண்பர்கள் இணைந்து ஆலோசித்து வருகின்றனர்.

கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரான சச்சிதானந்தம் என்கிற சச்சி, சில படங்களில் இணை கதாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இயக்குநராக சச்சிக்கு இரண்டாவது படம் 'அய்யப்பனும் கோஷியும்'. பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம் ஊரடங்குக்கு முன்பு வரை அதிகம் வசூல் செய்த மலையாளப் படமாக மாபெரும் வெற்றியடைந்தது. ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக சச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரம் கழித்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அங்கிருந்து ஜூபிளி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூளைக்குச் செல்லும் பிராண வாயு சீராக இல்லை என்றும், 48-72 மணி நேரங்கள் கழித்தே அவரது நிலை தெளிவாகத் தெரியும் என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் துறையில் சச்சியின் நெருங்கிய நண்பர்கள், மருத்துவ நிபுணர்களைச் சிகிச்சைக்காக வரவழைப்பது குறித்தும், தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் அல்லது விமானம் மூலமாக அவரை வேறு மருத்துவமனைக்கும் மாற்றி சிகிச்சை செய்வது பற்றியும் கலந்தாலோசித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT