தென்னிந்திய சினிமா

நேரலையால் உருவான சர்ச்சை: இதயமற்றவள் போல சித்தரிக்காதீர்கள் - சஞ்சனா கல்ரானி காட்டம்

செய்திப்பிரிவு

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான நேரலையில் மேக்கப் போட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து, சஞ்சனா கல்ரானி காட்டமாக கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக நடித்தது இவர் தான். இந்தப் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். இவரது திடீர் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.

சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து பல்வேறு முன்னணி தொலைக்காட்சியிலும் விவாதம் நடத்தினார்கள். இதிலொரு விவாதத்தில் சஞ்சனா கல்ரானி கலந்து கொண்டார். நேரலையில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, சஞ்சனா கல்ரானி மேக்கப் போட்டார். நேரலை என்பதால் பலரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருவருடைய மரணம் தொடர்பான நேரலையில் எப்படி மேக்கப் போடலாம் என்று சஞ்சனாவை பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினார். பல்வேறு மீம்கள், கிண்டல், சாடல்கள் என அதிகரிக்கவே சஞ்சனா கல்ரானி தனது ட்விட்டர் பதிவில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"அன்பார்ந்த நண்பர்களே, ஊடகத்தினரே, உருவாக்கப்பட்ட இந்த சர்ச்சையில் தயவு செய்து என்னை ஈடுபடுத்தாதீர்கள். இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இணையத்தில் பித்துப் பிடித்து உலவும் சில கழுகுகள் எனக்கு அனுப்பும் அவதூறுகளையும், கிண்டல்களையும் நான் பகிர்ந்தால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாவீர்கள். ஒரு பிரபலமாக இருப்பதில் என்ன பிரச்சினை என்றால், நாம் செய்யாத தவறுக்கும் கூட மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும்.

நான் ஆஜ் தக் ஸ்டூடியோவில் உட்கார்ந்திருக்கவில்லை. எனது வீட்டில் ஸ்கைப் மூலமாக பேசிக் கொண்டிருந்தேன். நான் பெங்களூருவில் வசிப்பவள். எனவே இந்த தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. வெறும் இரண்டு நொடிகள் நான் மேலோட்டமாக ஒப்பனை செய்தேன். அதற்கு எனக்கு வரும் சகிப்புத்தன்மையற்ற செய்திகளைப் பாருங்கள். நான் தயாராகிக் கொண்டு தான் இருந்தேன். அதற்குள் என் வீடியோவை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு அது தெரியாது. எனது பெயரைத் தொகுப்பாளர் அழைக்கவே இல்லை என்பதையும் நீங்கள் பார்க்கலாம். அங்கு ஒலியில் ஏதோ பிரச்சினையும் இருந்தது.

ஒருவரது இறப்பைப் பற்றிய உரையாடலை வைத்து தேவையில்லாத மலிவான சர்ச்சையை உருவாக்கி என்னை இதயமற்றவள் போல சித்தரிக்காதீர்கள். எனக்கு இது போன்ற விளம்பரம் தேவையே இல்லை. எனது புகைப்படத்தை தவறாகச் சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற நேரத்தில் எனக்கு ஆறுதலாகச் செய்திகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி"

இவ்வாறு சஞ்சனா கல்ரானி தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT