தென்னிந்திய சினிமா

என் சதையை விட ஆழமாகக் காயங்கள் ஏற்பட்டுள்ளன: சுஷாந்த் சிங் மரணம் குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து

செய்திப்பிரிவு

என் சதையை விட ஆழமாகக் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று வாரிசு அரசியல் குறித்து பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக நடித்தது இவர் தான். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவரது திடீர் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.

ஆனால், சுஷாந்த் சிங் மரணத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டில் வாரிசு அரசியல் தொடர்பான சர்ச்சை உருவெடுத்துள்ளது. கங்கணா ரணாவத் உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் பாலிவுட் திரையுலகினரை கடுமையாகச் சாடியுள்ளனர்.

இதனிடையே சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாகவும், வாரிசு அரசியல் தொடர்பாகவும் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"சுஷாந்த் சிங் ராஜ்புத். இன்னும் பல மைல் தூரம் உங்கள் பயணம் இருந்தது. ஆழமாகக் காயப்பட்டிருக்கிறேன். வாயடைத்துப் போயிருக்கிறேன். ஒரு அற்புதமான திறமை இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டது. இந்த அளவில்லா வலியைத் தாங்கும் வலிமை உங்கள் அன்பார்ந்தவர்களுக்குக் கிடைக்கட்டும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

வாரிசு அரசியல், நான் அதைத் தாண்டி வாழ்ந்திருக்கிறேன், தாக்குப் பிடித்துவிட்டேன். என் சதையை விட ஆழமாகக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இந்தக் குழந்தை சுஷாந்தால் (தாங்கிக் கொள்ள) முடியவில்லை. நாம் கற்றுக்கொள்வோமா? இதுபோன்ற கனவுகள் மரணிக்காமல் இருக்க நாம் ஒற்றுமையுடன் எழுந்து நிற்போமா?".

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT