தென்னிந்திய சினிமா

சிரஞ்சீவி மீது பாலகிருஷ்ணா பாய்ச்சல்: மீண்டும் வலுக்கும் மோதல்

செய்திப்பிரிவு

நடிகரும் ஹிந்துபூர் பகுதி எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணா தெலுங்கு திரைப்படக் கலைஞர்கள் சங்கத்துக்கான கட்டிடம் குறித்து பேசியுள்ளார்.

கரோனா நெருக்கடி காரணமாக தடைப்பட்டுள்ள தெலுங்கு திரைப்படங்களின் படப்பிடிப்புகளை மீண்டும் எப்போது தொடங்கலாம் என்பது பற்றி நடிகர் சிரஞ்சீவியின் இல்லத்தில், பல்வேறு இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன், அரசு தரப்பு ஆலோசனை நடத்தியது. இந்த சந்திப்புக்கு நடிகர் பாலகிருஷ்ணா அழைக்கப்படவில்லை.

இந்தச் சந்திப்புக்கு உங்களை அழைக்காததன் காரணம் என்ன, முதல்வர் சந்திரசேகர ராவை கடந்த காலத்தில் விமர்சித்ததன் காரணமாகவா என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டதற்கு, "நான் அப்படி நினைக்கவில்லை. கேசிஆர் அவர்கள் என் மீது கோபத்தில் இல்லை. அவர் என்.டி.ஆர் அவர்களின் ரசிகர். என்னை தனது மகனைப் போல பாவிக்கிறார். சினிமாவை அரசியலோடு கலக்கக்கூடாது" என்று பாலகிருஷ்ணா பதில் கூறியுள்ளார்.

மேலும், "திரைத்துறையில் அதிகமாக முகஸ்துதியும், பாசாங்கும் அதிகமாகியுள்ளது. திரைக் கலைஞர்கள் சங்கம் ரூ.5 கோடி செலவில் கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்தது. சிரஞ்சீவி உட்பட பல நடிகர்கள் அமெரிக்கா சென்று நிதி திரட்டினார்கள். என்னை அழைக்கவே இல்லை. அந்த திட்டம் என்ன ஆனது. அது குறித்து இது வரை எந்த முன்னேற்றமும் இல்லையே

திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்குவது குறித்து அரசாங்கம் தீர்மானமாக உள்ளது. ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு சம்பாத்தியம் வேண்டும். நாம் தான் அதிக அளவு வரி செலுத்துகிறோம். நாம் அவ்வளவு முக்கியமென்றால் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசோடு நல்ல இணக்கத்துடன் இருக்க வேண்டும். நம் திரைத்துறைக்குச் சாதகமாக ஏன் மானியங்களை அறிவிக்கச் சொல்லக் கூடாது?" என்று பாலகிருஷ்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT