தனது குடும்பத்துடன் மகேஷ் பாபு. 
தென்னிந்திய சினிமா

என் மகனுக்கும் நடிகனாக விருப்பம் என்று நினைக்கிறேன்: மகேஷ் பாபு

ஐஏஎன்எஸ்

என் மகனுக்கும் நடிகனாக விருப்பம் இருக்கிறது என தான் நினைப்பதாக நடிகர் மகேஷ் பாபு கூறியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் மகேஷ் பாபு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தெலுங்குத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது மனைவி நம்ரதாவும் நடிகையாக இருந்தவர். சமீபத்தில் மகேஷ் பாபு சமூக ஊடகத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அதில் ஒரு ரசிகர், ''உங்களுக்கு யார் மீதாவது ஈர்ப்பு இருந்திருக்கிறதா?'' என்று கேட்டார். அதற்கு மகேஷ் பாபு, "இருந்தது. 26 வயதில். அதன்பின் அவரையே மணந்து கொண்டேன். என் மனைவி நம்ரதா ஷிரோத்கர்" என்று பதில் கூறினார்.

இன்னொரு ரசிகர், ''நீங்கள் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, "நல்ல நடிகனாக, என் குழந்தைகளுக்கு அற்புதமான அப்பாவாக, என் மனைவிக்கு சிறந்த கணவனாக நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று பதிலளித்தார்.

அவரது மகனுக்கும் திரைப்பட நாயகனாக விருப்பமா என்று ஒருவர் கேட்டதற்கு, "அவருக்கு விருப்பம் என்றுதான் நினைக்கிறேன். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

இந்த ஊரடங்கு பற்றிய கேள்விக்கு, "இது ஒரு வாழ்நாள் அனுபவம். பல விஷயங்களை என் குடும்பத்தினரோடு செய்திருக்கிறேன். நான் வேலை செய்து கொண்டிருந்தால் இதையெல்லாம் செய்திருக்க முடியாது" என்று மகேஷ் பாபு கூறினார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியுடனான தனது அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்நோக்குவதாகக் கூறியுள்ள மகேஷ் பாபு, அனைவரும் முகக் கவசம் அணிந்து, விழிப்புடன் இருக்க வேண்டும், இந்த புதிய சகஜ நிலையை ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் தனது அடுத்த திரைப்படமான 'சர்காரு வாரி பாடா', வலிமையான ஒரு நல்ல செய்தியைச் சொல்லும் முழு நீளப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT