தென்னிந்திய சினிமா

நடிகர் ப்ரித்விராஜின் கட்டாயத் தனிமைக் காலம் முடிந்தது: இன்ஸ்டாகிராமில் பகிர்வு

ஐஏஎன்எஸ்

மலையாள நடிகர் ப்ரித்விராஜின் ஏழு நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து அடுத்த ஏழு நாட்கள் அவர் வீட்டுத் தனிமையில் இருக்கவுள்ளார்.

'ஆடுஜீவிதம்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக, ப்ரித்விராஜ் உள்ளிட்ட 50 பேர் கொண்ட குழு சில மாதங்களுக்கு முன்பு ஜோர்டான் நாட்டுக்குச் சென்றது. கரோனா நெருக்கடியால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கடந்த இரண்டு மாதங்களாக அங்கேயே சிக்கியிருந்த படக்குழு, கடந்த வாரம் இந்தியா திரும்பியது. இந்தியா திரும்பிய அனைவரும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தற்போது இந்தக் கட்டாயத் தனிமைக் காலம் முடிந்து அனைவரும் வீடு திரும்புகின்றனர். அடுத்த 7 நாட்கள் அனைவரும் வீட்டுத் தனிமையில் கழிக்க வேண்டும். இதைப் பகிர்வதற்காக தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் ப்ரித்விராஜ் பதிவிட்டுள்ளார்.

"எனது 7 நாட்கள் கட்டாயத் தனிமைக் காலம் இன்று முடிகிறது. அடுத்து 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்கவுள்ளேன். ஓல்ட் ஹார்பர் ஹோட்டலுக்கும் அங்கு இருக்கும் அற்புதமான பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கும் பெரிய நன்றி.

பி.கு - வீட்டுத் தனிமைக்குப் போகும் அல்லது ஏற்கெனவே இருப்பவர்கள் நினைவில் கொள்ளுங்கள். வீட்டுக்குச் செல்வதென்றால் தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலம் முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல" என்று அந்த புகைப்படத்தோடு பகிர்ந்துள்ளார்.

மேலும், "தனிமைக் காலத்துக்கான விதிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றுங்கள். அதிகாரிகள் வரையறை செய்துள்ள அதிக பாதிப்பு கொண்டவர்கள் யாரும் வீட்டில் இல்லை என்பதி உறுதி செய்யுங்கள்" என்றும் ப்ரித்விராஜ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT