திரையரங்குகளில் மது விற்பதற்கு உரிமம் அளித்தால் மக்கள் கூட்டம் அதிகரிக்குமா என்று 'மஹாநடி' இயக்குநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து நாக் அஸ்வின் இயக்கிய படம் 'மஹாநடி'. இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தேசிய விருதையும் வென்றது. இதனால் இந்திய அளவில் நாக் அஸ்வின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
'மஹாநடி' படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் நாக் அஸ்வின். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது முடிவாகவில்லை
இதனிடையே, கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் மக்களைத் திரையரங்கிற்கு வரவைக்க யோசனை ஒன்றை தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்தார். அது என்னவென்றால் "ஒருமுறை சுரேஷ்பாபு மற்றும் ராணா இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தபோது, வெளிநாடுகளைப் போல தியேட்டர்களில் பீர், மது விற்பதற்கு உரிமம் கொடுக்கப்பட்டால் அது கூட்டத்தை அதிகப்படுத்துமா என்ற பேச்சு வந்தது. அதன் மூலம் திரையரங்கத் தொழிலைக் காப்பாற்ற இயலுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இது நல்ல யோசனையா? அல்லது தவறான யோசனையா?" என்று தெரிவித்தார்.
இந்தப் பதிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து நாக் அஸ்வின், "முற்றிலும் உண்மை. அது ஃபேமிலி ஆடியன்ஸை தியேட்டருக்கு வருவதைத் தடுக்கும். ஒரு சில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் வேண்டுமானால் அனுமதிக்க முடியும். ஆனால் அது தீர்வு கிடையாது. மக்களை மீண்டும் வரவைப்பதற்கும், பார்வையாளர்களை அதிகரிக்கவும் தியேட்டர்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள். தியேட்டர்கள் திறந்தவுடனேயே நீங்கள் படம் பார்க்கச் செல்வீர்களா? அல்லது சில வாரங்கள் காத்திருப்பீர்களா?" என்று தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நாக் அஸ்வின்