தென்னிந்திய சினிமா

'ஆர்.ஆர்.ஆர்' பட வெளியீட்டில் மாற்றம்

செய்திப்பிரிவு

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள், இறுதிக்கட்டப் பணிகள், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு என அனைத்துமே கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படம் அடுத்தாண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்தத் தேதியில் வெளியீட்டுக்கு சாத்தியமில்லை என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. கரோனா ஊரடங்கு முடிந்து சகஜ நிலைக்கு திரும்பியவுடன் புதிய தேதி எப்போது என முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தின் பொருட்செலவுக்கு அடுத்தாண்டு கோடை விடுமுறைக்குத் தான் வெளியிடுவார்கள் என தெலுங்கு திரையுலகினர் குறிப்பிட்டுள்ளனர்.

கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் அலியா பட் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

SCROLL FOR NEXT