'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' படத்துக்காக எதிர்கொண்ட கிண்டல் தொடர்பாக ராஷி கண்ணா விளக்கம் அளித்துள்ளார்.
கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்'. கே.ஏ.வல்லபா மற்றும் கே.எஸ்.ராமராவ் இணைந்து தயாரித்த இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரீன் தெரசா மற்றும் இஷாபெல்லா ஆகியோர் நடித்திருந்தனர்.
காதலர் தின வெளியீடாகத் திரைக்கு வந்த இந்தப் படம் பெரும் தோல்வியை தழுவியது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கு மட்டுமே பெரும் பாராட்டு கிடைத்தது. மிகத் தீவிரமான கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடித்திருந்தார்.
ராஷி கண்ணாவின் நடிப்பைப் பலரும் விமர்சனத்தில் சாடியிருந்தனர். மேலும், மீம்களும் வெளியிட்டு அவரது நடிப்பைக் கிண்டல் செய்தனர். தற்போது 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' படத்துக்காக வெளிவந்த விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் குறித்து ராஷி கண்ணா கூறியிருப்பதாவது:
"ஒரு வேளை தீவிரமான கதாபாத்திரங்களில் என்னைப் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லையோ என்னவோ. நான் இந்தக் கதையைக் கேட்டதுமே எப்படியாவது இதில் நடித்துவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் சில நேரங்களில் காகிதத்தில் இருப்பது திரையில் அப்படியே சரியாக வருவதில்லை.
படத்தைச் சுவாரசியமாக்க சில காட்சிகள் நீக்கப்பட்டன. அந்தக் காட்சிகள் என் கதாபாத்திரத்தைப் பற்றிய ஒரு நல்ல பார்வையைத் தந்திருக்கும். எப்படியிருந்தாலும் அந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது".
இவ்வாறு ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தக் கிண்டலால் தீவிரமான கதாபாத்திரங்களில் நடிக்காமல் இருக்கமாட்டேன் எனவும், கமர்ஷியல் படங்கள் மற்றும் தீவிரமான படங்கள் என மாறி மாறி நடிப்பேன் எனவும் ராஷி கண்ணா குறிப்பிட்டுள்ளார்.