தென்னிந்திய சினிமா

கேரளாவில் மே 4 முதல் சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி 

செய்திப்பிரிவு

மே மாதம் 4ம் தேதி முதல் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளான இறுதி கட்ட பணிகளை தொடங்கிக் கொள்ளலாம் என்று கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

கேரள அரசின் பண்பாடு மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், அதிகபட்சம் 5 நபர்கள் தேவைப்படும் திரைப்படப் பணிகளை மே 4 முதல் தொடங்கலாம். முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசித்த பிறகு இந்த முடிவு சனிக்கிழமை எடுக்கப்பட்டது என்றார்.

மாநிலத்தின் கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை துறையினரின் பணிகள் சில அனுமதிக்கப்பட்டுள்ளன.

டப்பிங், இசை, சவுண்ட் மிக்சிங், ஆகிய பணிகள் திங்கள் முதல் தொடங்கலாம் என்று ஏ.கே.பாலன் தெரிவித்தார்.

இதற்காக ஸ்டூடியோக்கள் இன்றைக்குள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுவது அவசியம். பணியாற்றுபவர்கள் முகக்கவசம் அணிவது அவசியம். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

அதாவது சமூக விலகல் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற கரோனா தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT