இர்ஃபான் கானால் நடிகனானேன், என் திரை வாழ்க்கை அவருக்கு கடன்பட்டுள்ளது என்று ஃபகத் பாசில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் ஃபகத் பாசில். திரையுலகில் அறிமுகமான காலத்திலிருந்தே தனது படம் தொடர்பான விளம்பர நிகழ்வுகளில் பெரிதாக கலந்து கொண்டதில்லை. மேலும் , பேட்டிகள் கூட சில முக்கியமான படங்களுக்கு, முக்கியமான நாளிதழ்கள், பத்திரிகைகளுக்கு மட்டுமே கொடுத்திருப்பார். அறிக்கைகள் கூட இவரிடமிருந்து வெளிவராது.
தற்போது, இந்தி நடிகர் இர்ஃபான் கான் மறைவுக்கு ஒரு நீண்ட கடிதத்தை வெளியிட்டுள்ளார் ஃபகத் பாசில். இதில் தன்னை இர்ஃபான் கான் எந்தளவுக்கு ஈர்த்தார், எந்தளவுக்குப் பிடிக்கும் என்பதை எல்லாம் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இர்ஃபான் கான் மறைவு குறித்து ஃபகத் பாசில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"பல வருடங்களுக்கு முன்பு, என்னால் எந்த வருடமென்று சரியாக சொல்ல முடியவில்லை. அமெரிக்காவில் நான் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடந்தது. நான் கல்லூரி வளாகத்தில் தங்கியிருந்தேன். அங்கு இந்தியப் படங்களே பார்க்க முடியாது. அதனால், நானும் எனது நண்பன் நிகுஞ்ச் என்பவரும், எங்கள் வளாகத்துக்குப் பக்கத்தில் காலதி பாய் என்ற பாகிஸ்தான்காரர் மளிகைக் கடை வைத்திருந்தார். அங்கு சென்று வார இறுதியில் பார்க்க டிவிடியை வாடகைக்கு எடுப்போம்.
அப்படி ஒரு முறை அங்கு சென்ற போது, காலித் பாய், 'யு ஹோயா தோ க்யா ஹோதா' என்ற படத்தைப் பரிந்துரைத்தார். அந்தப் படத்தின் இயக்குநர் நசீருதின் ஷா என்பதைத் தான் நான் முதலில் கவனித்தேன். வார இறுதியில் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். அன்றிரவு, படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் சலீம் ராஜபலி என்ற கதாபாத்திரம் திரையில் வந்த போது, நிகுஞ்சிடம் 'யார் இந்த ஆள்?' என்று கேட்டேன்.
சில நடிகர்கள் தீவிரமாக நடிப்பார்கள், சிலர் ஸ்டைலாகவும், கவர்ச்சிகரமாகவும் இருப்பார்கள். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், திரையில் அசலாகத் தெரிந்த நடிகரை நான் அப்போதுதான் முதல் முறை பார்த்தேன். அவரது பெயர் இர்ஃபான் கான்.
நான் அவரை தாமதமாகக் கவனித்திருக்கலாம். ஆனால் உலகம் அவரது திறமையைக் கண்டுகொள்ள நீண்ட காலம் பிடிக்கவில்லை. ஜும்பா லாஹிரியின் புத்தகம்: 'தி நேம்ஸேக்', திரைப்படமான போது, இர்ஃபான் கான் அதில் அசோக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்து, அங்கிருந்த இந்திய மக்கள் சந்தோஷப்பட்டனர்.
இர்ஃபான் கானின் வளர்ச்சி ஒரு புகழ்பெற்ற பாடலைப் போல நடந்தது. எல்லோரும் அதைப் பாடி, உணர்ந்து கொண்டிருந்தனர். நான் தொடர்ந்து அவரது படங்களைப் பார்த்தேன். சில சமயம் கதையைக் கூட கவனிக்காமல் அவரது நடிப்பை மட்டுமே பார்த்து ஆச்சரியப்பட்டு, ஆழ்ந்துவிடுவேன். நடிப்பு என்பது எளிமையான ஒன்று என்பதைப் போல அவர் காட்டினார். நான் ஏமாந்துவிட்டேன். இர்ஃபான் கானை தெரிந்துகொண்டதற்கு நடுவில், திரைப்படங்களில் நடிப்பதற்காக பொறியியலை விட்டுவிட்டு இந்தியா திரும்ப முடிவெடுத்தேன்.
கடந்த பத்து வருடங்களாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் அல்லது நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நான் இர்ஃபான் கானை இதுவரை சந்தித்ததில்லை. ஏன் நேரில் பார்த்தது கூட இல்லை. ஆனால் அவருடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்களுடன் பணியாற்றும் அளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது.
விஷால் பரத்வாஜை நான் பார்த்தபோது பேசிய முதல் விஷயம் 'மக்பூல்' திரைப்படம் பற்றியதுதான். என் அன்பு நண்பர் துல்கர், இர்ஃபான் கானுடன், எனது சொந்த ஊரில் படப்பிடிப்பில் இருந்தார். ஆனால் அப்போது எனக்கு இடைவிடாத வேலைகள் இருந்ததால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை.
அவசரப்பட்டு அவரைச் சந்திக்க எனக்குக் காரணம் கிடைக்கவில்லை. இன்று, நான் அவரை சந்தித்து கை குலுக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். நான் மும்பைக்குச் சென்று அவரை சந்தித்திருக்க வேண்டும். இந்த தேசம் ஒரு அப்பழுக்கற்ற கலைஞரை இழந்துவிட்டது. அவரது இழப்பு அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் எப்படி இருக்கும் என்பது எனக்குப் புரிகிறது.
அவரது இழப்பினால் வெற்றிடத்தை உணரப்போகும் கதாசிரியர்களுக்காகவும், இயக்குநர்களுக்காகவும் நான் வருந்துகிறேன். நமக்கு அவரது முழு நடிப்புத் திறனும் கிடைக்கவில்லை. இன்று என் மனைவி என் அறைக்குள் வந்த இந்த செய்தியைச் சொன்ன போது நான் அதிர்ச்சியுற்றேன் என்று சொன்னால் அது பொய்யாக இருக்கும். நான் என்ன செய்து கொண்டிருந்தேனோ அதைச் செய்து கொண்டிருந்தேன். அப்படியே ஒரு நாள் சென்றது. இன்று என்னால் அவரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.
எனது திரை வாழ்க்கைக்கு அவருக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன். அன்று நான் அந்த டிவிடியை எடுக்கவில்லை என்றால், அந்த நடிகர் என் வாழ்வை மாற்றவில்லையென்றால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்.
நன்றி சார்”
இவ்வாறு ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார்.