தென்னிந்திய சினிமா

இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் படம்: 'பாகுபலி' படக்குழுவினர் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் படம் 'பாகுபலி 2' என்று படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இதில் கதை முடியாத காரணத்தால், 2-ம் பாகத்தை 'பாகுபலி 2' என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டது படக்குழு. இந்தப் படம் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது.

இந்திய அளவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற இமாலயச் சாதனையை இப்படம் நிகழ்த்தியது. மேலும், பல்வேறு இந்திப் படங்களின் வசூல் சாதனை அனைத்தையும் முறியடித்தது.

இன்று (ஏப்ரல் 28) 'பாகுபலி 2' வெளியான நாள் என்பதால், பாகுபலி படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"எல்லைகளைக் கடந்த ஒரு படம். எங்களது வாழ்க்கை, எங்களது கனவு. பல கோடி இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு படம். 'பாகுபலி 2' என்கிற சுனாமி பெரிய திரைக்கு வந்து 3 வருடங்கள் ஆகிவிட்டன.

ஏப்ரல் 28. இந்திய சினிமாவில் ஒரு மைல்கல். வரலாறு படைக்கப்பட்டது. வசூல் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. ஒரு இந்தியத் திரைப்படம், வெகுவிரைவாக ரூ.1000 கோடி வசூலை எட்டியது. இன்னும் எவ்வளவோ சாதனைகள். ஜெய் மகிழ்மதி"

இவ்வாறு 'பாகுபலி' படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தயாரிப்பாளர் ஷோபு தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த ஒட்டுமொத்தக் குழுவுக்கும், ரசிகர்களுக்கும், இதைச் சாத்தியமாக்கிய உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய நன்றியைத் தவிர வேறென்ன நான் சொல்லிவிட முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT