'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினரின் முடிவால், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்
'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து, தற்போது 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ராம்சரண் பிறந்த நாளுக்கு, அவருடைய லுக் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் ஆகியவை வெளியிடப்பட்டன. வீடியோ அறிமுகமும் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனிடையே, மே 20-ம் தேதி ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாள் வருகிறது. அந்த நாளில் ஜூனியர் என்.டி.ஆரின் கதாபாத்திர அறிமுகம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். ஆனால், அது சாத்தியமில்லை என்று அறிவித்துள்ளார் ராஜமெளலி.
தற்போது லாக்டவுனில் இருப்பதால் அனைவருமே அவரவர் வீட்டில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் ராஜமெளலி. மேலும், ராம்சரண் பிறந்த நாளுக்கான வெளியீட்டுப் பணிகள் முன்பே அனைத்து முடிக்கப்பட்டு, டப்பிங் பணிகள் மட்டுமே வீட்டிலிருந்து நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளார் ராஜமெளலி. இதனால், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.
'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக ராஜமெளலி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.