தனக்கு 'பாராசைட்' படம் சுவாரசியமாக இல்லை என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியுள்ளார். இது இணையத்தில் நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
'பாகுபலி' வெற்றிக்குப் பின், ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 'இரத்தம், ரணம், ரௌத்திரம்' படத்தை இயக்கி வந்தார் ராஜமௌலி. தற்போது கரோனா நெருக்கடியால் நிலவும் ஊரடங்கின் காரணமாக படம் தொடர்பான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. படத்தின் வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்காக, வீட்டிலிருந்தே வீடியோ கால் மூலமாக பேட்டி கொடுத்துள்ளார் ராஜமௌலி. அதில் இந்த வருடம் ஆஸ்கர் விருது விழாவில் வரலாறு படைத்த தென்கொரியப் படமான 'பாராசைட்' குறித்து பேச்சு வந்தது. தனக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை என்றும், தான் தூங்கிவிட்டதாகவும், விழித்துப் பார்க்கும்போது ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்தார்கள். ஒன்றும் புரியவில்லை என்றும் ராஜமௌலி கூறியுள்ளார்.
சிறந்த படம், சிறந்த சர்வதேசப் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் என நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்ற தென்கொரியப் படம் 'பாராசைட்'. 92 வருட ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த திரைப்படம் என்ற விருதைப் பற்ற முதல் அயல்மொழித் திரைப்படம் என்ற பெருமை பெற்ற திரைப்படம். இந்தப் படம் தொடர்பாக ராஜமௌலியின் இந்தக் கருத்து இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜமௌலியின் கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலர் பேசி வருகின்றனர். ஒரு படத்தை முழுமையாகப் பார்க்காமல் எப்படி அதைப் பற்றிச் சொல்லலாம் என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.