என்னுடைய அடுத்த படம் ரீமேக் அல்ல என்று 'ஓ பேபி' இயக்குநர் நந்தினி ரெட்டி விளக்கமளித்துள்ளார்
2019-ம் ஆண்டு நந்தினி ரெட்டி இயக்கத்தில் வெளியான படம் 'ஓ பேபி'. இதில் சமந்தா, லட்சுமி, நாக சவுரியா, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் 'மிஸ் கிரானி' என்ற கொரியப் படத்தின் தழுவல் ஆகும். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
'ஓ பேபி' படத்தைத் தொடர்ந்து நந்தினி ரெட்டியின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இந்தப் படத்தை ஸ்வப்னா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனிடையே, இந்தப் படமும் ஒரு கொரியப் படத்தின் ரீமேக் என்றும், இதிலும் சமந்தா நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்தச் செய்திகள் தொடர்பாக இயக்குநர் நந்தினி ரெட்டி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என்னுடைய அடுத்த படம் ரீமேக் அல்ல. ஸ்வப்னா சினிமாவால் தயாரிக்கப்படும் அப்படம் ஒரு அசல் கதை. எப்போது நானும் சமந்தாவும் எங்களுடைய அடுத்த படத்தில் பணிபுரிகிறோமா அதை நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறிவிப்போம். தற்போது, இதுவும் ஒரு வதந்தியே. இந்த வதந்திக்கு என்னுடைய ரேட்டிங் 1/5.. கம் ஆன் நண்பர்களே.. உங்களால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும்"
இவ்வாறு நந்தினி ரெட்டி தெரிவித்துள்ளார்.