'அலா வைகுந்தபுரம்லோ' படம் தமிழில் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில், த்ரிவிக்ரம் இயக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்த படம் ’அலா வைகுந்தபுரம்லோ’. குடும்ப உறவுகள், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன் என தரமான பொழுதுபோக்குப் படமாகப் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட ரூ.250 கோடி வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது.
படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் என அனைத்துமே மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது,. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது வரை இதன் எந்தவொரு மொழி உரிமையையும் படக்குழுவினர் விற்கவில்லை.
அதற்குள் தமிழில் 'வாலு', 'ஸ்கெட்ச்' இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிக்க இந்தப் படம் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், சிவகார்த்திகேயனும் இதில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரித்த போது, "தற்போது வரை 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் ரீமேக் உரிமையை யாருக்கும் படக்குழுவினர் விற்கவில்லை. இதனால் இந்தச் செய்திகள் அனைத்தும் வதந்தியே. பலரும் உரிமையைக் கேட்டு வருவது உண்மைதான். ஆனால், படக்குழுவினர் பெரும் விலை கேட்பதால் அனைவரும் தயக்கம் காட்டிவருகிறார்கள்" என்று தெரிவித்தார்கள்.