தென்னிந்திய சினிமா

துரத்தி, மிரட்டிக் காதலிக்க வைக்கும் இன்னொரு பாடல்: சர்ச்சையில் ராஷ்மிகாவின் பொகரு

செய்திப்பிரிவு

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கன்னடத்தில் வெளியாகவுள்ள 'பொகரு' திரைப்படம், வெளியீட்டுக்கு முன்னரே சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கன்னடத் திரையுலகின் பிரபலமான இயக்குநர் நந்தா கிஷோர். இவர் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ஓ மை காட்' (இந்தி), 'அத்தாரிண்டிகி தாரேதி' (தெலுங்கு) உள்ளிட்ட படங்களின் கன்னட ரீமேக் பதிப்பை இயக்கி வெற்றி கண்டவர். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் 'பொகரு'.

இதில் துருவா சார்ஜா - ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்துள்ளனர். இந்த மாதம் இந்தத் திரைப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நிலவும் ஊரடங்கால், பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வீடியோ பாடல் ஒன்று ஏப்ரல் 2-ம் தேதி அன்று யூடியூபில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

ஒரே நாளில் 4.5 மில்லியன் பார்வைகளைக் கடந்து, வெளியான 24 மணிநேரத்தில் யூடியூபில் அதிக முறை பார்க்கப்பட்ட கன்னட பாடல் என்ற சாதனையைப் படைத்தது. ஆனால் இன்னொரு பக்கம் இந்தப் பாடலின் தன்மை பலரது கண்டனங்களைச் சம்பாதித்துள்ளது.

இந்தப் பாடலில், பெரிய ரவுடி கூட்டத்தின் தலைவனைப் போல இருக்கிறார் நாயகன் துருவா சார்ஜா. அப்பாவி நாயகியான ராஷ்மிகாவை துரத்தி, மிரட்டி எனப் பல விதங்களில் அச்சுறுத்தி தன்னைக் காதலிக்கும்படி சொல்வது போல பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெண்களைப் பின் தொடர்தல், வற்புறுத்தி, அச்சுறுத்தி, காதலிக்க வைத்தல் என எந்த மொழியில் பாடல்களும் வந்தாலும் அது இணையத்தில் எதிர்ப்புகளைச் சம்பாதித்து வருகின்றன.

கத்தியில் மிரட்டுவது, பலவந்தமாகக் கட்டிப்பிடிப்பது, தூக்குவது, தலைமுடியைப் பிடித்து இழுப்பது, மின்சார ஷாக் வைத்துவிடுவதாகப் பயமுறுத்துவது என இந்தப் பாடலில் எல்லை மீறிய காட்சிகள் இடம்பிடித்துள்ளது பெண்ணியவாதிகளையும், சமூக ஆர்வலர்களையும் ஆத்திரப்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்தப் பாடலைக் கண்டித்து பலர் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். யூடியூபிலிருந்தும், படத்திலிருந்தும் இந்தப் பாடலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பெண்களின் உரிமைக்காக இயங்கும் சில அமைப்புகள் இயக்குநருக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளன. ஆனால், இன்னொரு பக்கம் இந்தப் பாடலில் பார்வைகள் ஏறுமுகத்தில் உள்ளன.

SCROLL FOR NEXT