தென்னிந்திய சினிமா

திட்டமிட்டபடி வெளியாகுமா 'ஆர்.ஆர்.ஆர்'? - மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு

செய்திப்பிரிவு

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெளியீடு, மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. இதைச் சுருக்கமாக 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைத்து வருகிறது படக்குழு. கரோனா முன்னெச்சரிக்கையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஓலிவா மோரிஸ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

நாயகர்களுக்குப் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் இந்தப் படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் தேதியிலும் 'ஆர்.ஆர்.ஆர்' வெளியாவது சந்தேகம்தான் என்கிறார்கள் தெலுங்குத் திரையுலகில்.

என்னவென்றால், இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. இப்போது கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளில் எந்தவொரு பணியுமே நடைபெறவில்லை. இதனால், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இன்னும் படப்பிடிப்பு முடிவடையவில்லை.

அந்தப் படப்பிடிப்பும் முடிந்து கிராபிக்ஸ் பணிகளுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். இந்த மாதிரியான பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் 'ஆர்.ஆர்.ஆர்' அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்குத்தான் சாத்தியம் என்கிறார்கள். மேலும் இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் குறைந்து எப்போது சகஜநிலைக்கு திரும்புவோம் என்பதே இன்னும் தெரியாமல் உள்ளது.

'ஆர்.ஆர்.ஆர்' படத்திலிருந்து ராம் சரண் லுக்கை அவருடைய பிறந்த நாளுக்கு வெளியிட்டது படக்குழு. இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT