ராம் சரண் தொடர்பாக சிரஞ்சீவி விடுத்த கோரிக்கைக்கு, இயக்குநர் ராஜமெளலி ஒப்புதல் அளித்துள்ளார்.
'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராம் சரண் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படத்துக்கு 'ஆச்சாரியா' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. ஒளிப்பதிவாளராக திரு, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன், இசையமைப்பாளராக மணிசர்மா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் நாயகி பொறுப்பிலிருந்து த்ரிஷா விலகவே, அவருக்குப் பதிலாக காஜக அகர்வால் நடிக்கவுள்ளார். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், மீண்டும் படப்பிடிப்பு தொடங்க படக்குழுவினர் காத்திருக்கிறார்கள்.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக தற்போது சிரஞ்சீவி விளக்கம் அளித்துள்ளார்.
மகேஷ் பாபு நடிக்கவுள்ளது தொடர்பாக சிரஞ்சீவி கூறியிருப்பதாவது:
"இதுபோன்ற செய்திகளெல்லாம் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே கொரட்டாலா சிவா, ராம் சரணை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். நாங்கள் மகேஷ் பாபு பற்றிச் சிந்திக்கவே இல்லை. ராஜமௌலியிடம் கோரிக்கை வைத்து சரணை ஒரு மாதம் எங்கள் படப்பிடிப்புக்காக அனுப்பச் சொன்னோம். அவரும் ஒப்புக்கொண்டார். நானும் சரணும் அப்பா - மகன் கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. குரு - சிஷ்யன் போன்ற கதாபாத்திரங்கள்".
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.