சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் இணையும் படத்துக்கும் 'புஷ்பா' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அல்லு அர்ஜுன். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இன்னும் அல்லு அர்ஜுன் காட்சிகள் எதுவும் படமாக்கப்படவில்லை என்றாலும், அவர் இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காகத் தன்னைத் தயார்படுத்தி வருகிறார். இன்று (ஏப்ரல் 8) அல்லு அர்ஜுன் பிறந்த நாள் என்பதால், இந்தப் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
'புஷ்பா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் தயாராகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.