கரோனா அச்சம் நீங்கிய பிறகே அப்டேட்கள் வரும் என்று 'பிரபாஸ் 20' படத்தைத் தயாரித்து வரும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
'சாஹோ' வெளியீட்டுக்கு முன்பாகவே, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் பிரபாஸ். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை ராதா கிருஷ்ணா இயக்கி வருகிறார்.
பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை அனைத்து மொழிகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதில் பிரபாஸுக்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். கரோனா அச்சத்துக்கு இடையே ஜார்ஜியாவில் இதன் படப்பிடிப்பை முடித்துத் திரும்பியது படக்குழு.
வெளிநாட்டிலிருந்து திரும்பியதால், கரோனா அச்சத்தால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் பிரபாஸ். இதனிடையே, இந்தப் படம் தொடர்பாக எந்தவொரு அப்டேட்டுமே வெளியாகாமல் உள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் தொடர்ச்சியாகத் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுக் கேள்விகள் எழுப்பி வந்தார்கள். மேலும், சிலர் மீம்ஸ்களும் வெளியிட்டனர்.
இதற்கு விளக்கமளிக்கும் விதமாக யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில், "உலகளாவிய நோய்த்தொற்றின் மத்தியில் இருக்கிறோம். தற்போதைய சூழலில் பலரின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறது. நாங்கள் எங்களுடைய அனைத்து விதமான செயல்பாடுகளையும் நிறுத்தி வைத்துள்ளோம். இவை அனைத்தும் முடிந்தபிறகு, பல அப்டேட்டுகளுடன் வருவோம் என்று உறுதியளிக்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, 'மஹாநடி' இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் பிரபாஸ்.