வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய முகக் கவசங்களைப் பயன்படுத்தும்படி நடிகர் விஜய் தேவரகொண்டா அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவை கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊரடங்கை இன்னும் நீட்டிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை என்பதால், திரையுலகப் பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
மேலும், அவ்வப்போது கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோக்கள், அறிவுரைகள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது முகக் கவசங்கள் குறித்து விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"அனைவருக்கும் என் அன்பு. பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். முகத்தைத் துணியால் மூடுவது இந்தத் தொற்றைக் குறைக்கும். மருத்துவ முகக் கவசங்களை மருத்துவர்கள் பயன்பாட்டுக்கு விடுங்கள். மற்றவர்கள் கர்ச்சீஃப், துண்டு, துப்பட்டா எனப் பயன்படுத்தி உங்கள் முகத்தை மூடுங்கள். பாதுகாப்பாக இருங்கள்".
இவ்வாறு விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
ஒருசில இடங்களில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கவில்லை என்ற செய்திகள் வந்ததையடுத்தே விஜய் தேவரகொண்டா இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார் என்று தெரிகிறது.
விஜய் தேவரகொண்டாவின் முதல் பாலிவுட் திரைப்பட படப்பிடிப்பு கரோனா முடக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.