பெண் ரசிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த சிரஞ்சீவிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தற்போது கரோனா வைரஸ் தொற்று இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுக்கவே எந்தவொரு பணியும் நடைபெறவில்லை என்பதால், பெரும் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால், தெலுங்குத் திரையுலகில் முதல் நபராகத் தொழிலாளர்களுக்கு உதவ 1 கோடி ரூபாய் ஒதுக்கினார் சிரஞ்சீவி. அதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்புக்கு என்று ஒரு அமைப்பைத் தொடங்கினார். அதற்கு பல்வேறு முன்னணி நடிகர்களும் உதவ, அந்தத் தொகையை வைத்து தொழிலாளர்களுக்கு உதவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளுக்கு இடையே தன் ரசிகை ஒருவருக்கு மருத்துவ உதவி செய்து பாராட்டைப் பெற்றுள்ளார் சிரஞ்சீவி. பெண்கள் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவருக்கு இதயக் கோளாறு இருந்து வந்தது. இது குறித்துக் கேள்விப்பட்ட சிரஞ்சீவி, உடனடியாக நாகலட்சுமியின் அறுவை சிகிச்சைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
தனிப்பட்ட முறையில் பெரிய மருத்துவமனை ஒன்றின் மருத்துவரிடம் பேசி நாளை (ஏப்ரல் 8) இந்த அறுவை சிகிச்சை நடக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். சிரஞ்சீவியின் இந்தச் செயல் அனைத்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.