தென்னிந்திய சினிமா

கரோனா வைரஸ் மதச்சார்பற்றது; சமத்துவத்தை நம்புகிறது: ராஷி கண்ணா காட்டம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் மதச்சார்பற்றது என்றும், அது சமத்துவத்தை நம்புகிறது என்றும் நடிகை ராஷி கண்ணா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 3374 பேருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் 77 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவ சோதனையில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதை வைத்து முஸ்லிம்களால்தான் அதிகம் கரோனா வைரஸ் பரவுகிறது என்று சமூ கவலைதளத்தில் பலரும் கருத்துகளை வெளியிடத் தொடங்கினார்கள்.

இது தொடர்பாக முன்னணி நடிகையாக ராஷி கண்ணா தனது ட்விட்டர் பதிவில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

”99.99% இந்துக்கள் கோமியம் குடிப்பதில்லை, கரோனா வைரஸை கோமியம் குணப்படுத்தும் என்று நம்புவதுமில்லை. 99.99% முஸ்லிம்கள் தப்லீக் ஜமாஅத் நிகழ்வை ஆதரிக்கவில்லை, அந்த நிகழ்வில் மவுலானா சாத் சொன்னதை ஏற்கவுமில்லை.

கோவிட் 19 வைரஸ் மதச்சார்பற்றது. அது மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிப்பதில்லை. அது சமத்துவத்தை நம்புகிறது. ஜாதி, மதம், செல்வம், அந்தஸ்து எனத் தொடர்பிலிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பாதித்துக் கொல்கிறது.

ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு கரோனாவுக்கு எதிரான இந்த போரில் ஒன்றாகச் செயல்படுவோம்"

இவ்வாறு ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT