தென்னிந்திய சினிமா

ஒரே படத்தில் இரண்டு பெரும் நடிகர்களை இயக்கிய அனுபவம்: ராஜமெளலி பகிர்வு

செய்திப்பிரிவு

ஒரே படத்தில் இரண்டு பெரும் நடிகர்களை இயக்கிய அனுபவம் குறித்து ராஜமெளலி அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ஒரே சமயத்தில் இரண்டு பெரும் நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை இயக்கிய அனுபவத்தை பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார் ராஜமெளலி. அதில் "இரண்டு நடிகர்களுக்குமே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இது உங்கள் தோளின் மீது சுமத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய பொறுப்பாக தோன்றுகிறதா?" என்ற கேள்விக்கு " இல்லை. அதை நான் ஒரு சுமையாக பார்க்கவில்லை. எனக்கு அது ஒரு எனர்ஜி பூஸ்டராகத்தான் பார்க்கிறேன்" என பதிலளித்துள்ளார் ராஜமெளலி.

மேலும், இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் சமூகவலைதளத்தில் மோதிக் கொண்டாலும், நடிகர்கள் நண்பர்களாக இருப்பது குறித்த கேள்விக்கு ராஜமெளலி, "ரசிகர்கள் என்பவர்களும் இருப்பார்கள். ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் இருப்பார்கள். ஆனால் சினிமாவை ரசிக்கக் கூடிய கோடிக்கணக்கான பொதுவான ரசிகர்கள் இருப்பார்கள். நடிகர்களின் ரசிகர்களையும் திருப்திபடுத்த வேண்டும்தான் என்றாலும் சினிமா ரசிகரகளின் எதிர்பார்ப்பையும் மறந்துவிடக்கூடாது.

நான் சிறுவயதில் காமிக்ஸ் படிக்கும்போது ஸ்பைடர்மேனும் சூப்பர்மேனும் இணைந்தால் எப்படி இருக்கும்? பீம் மற்றும் ஹனுமான் இணைந்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிப்பேன். இரண்டு பெரிய ஆளுமைகள் இணைவது எப்போதும் நன்றாக இருக்கும். ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் இருவருமே தொழில்ரீதியாக எதிரெதிர் குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இருவருமே நல்ல நண்பர்கள். எனக்கும் கூட இருவருமே நல்ல நண்பர்கள் தான். எனவே ரசிகர்களின் மோதல்கள் இதனை பாதிக்காது" என்று தெரிவித்துள்ளார் ராஜமெளலி

SCROLL FOR NEXT