விளக்குகள் ஏற்றி விரட்டுவோம் என்று பிரதமரின் வேண்டுகோளுக்கு சிரஞ்சீவி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதனிடையே பிரதமர் மோடி இன்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார்.
என்ன சொல்லப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"5 ஏப்ரல் அன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு, நமது பிரதமரின் அழைப்புக்கு மரியாதை கொடுத்து, கரோனாவின் இருட்டையும், சோகத்தையும், நாம் விளக்குகள் ஏற்றி விரட்டுவோம். நமது நாட்டுக்காக இணைந்து நிற்போம். ஒருவர் மற்றொருவருக்காகத்தான் நிற்கிறோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்"
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.