தென்னிந்திய சினிமா

கரோனா வைரஸ் பாதிப்பு: நடிகர் பாலகிருஷ்ணா 1.25 கோடி ரூபாய் நிதியுதவி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்புக்காக நடிகர் பாலகிருஷ்ணா 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 2500 பேரைத் தாண்டிவிட்டது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.

படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த திரையுலகினர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். தெலுங்கில் 'கரோனா நெருக்கடிக்கான தொண்டு அமைப்பு' என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளார் சிரஞ்சீவி.

இதற்கு முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். மேலும், ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவிகள் வழங்கியுள்ளனர். தற்போது நடிகர் பாலகிருஷ்ணாவும் தன் பங்காக 1 கோடி 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்ச ரூபாயும், கரோனா நெருக்கடிக்கான தொண்டு அமைப்புக்கு 25 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

இதுபோக பாலகிருஷ்ணாவின் இளைய மருமகனான பாரத் தான் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் சார்பாக 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT