'பாகுபலி 2' படத்தின் டி.ஆர்.பி சாதனையை 'சரிலேரு நீக்கெவரு' படம் தாண்டி சாதனை புரிந்துள்ளது.
அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு, விஜயசாந்தி, ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சரிலேரு நீக்கெவரு'. ஜனவரி 11-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு இன்னும் தனது அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. இதனிடையே, இந்தப் படம் தற்போது 'பாகுபலி' படங்களின் சாதனைகளை எல்லாம் முறியடித்துள்ளது.
உகாதி பண்டிகை அன்று 'சரிலேரு நீக்கெவரு' திரைப்படம் ஜெமினி தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது. இந்தப் படம் டி.ஆர்.பி எனப்படும் பார்வையாளர்களின் கணக்கில் 23.4 என்ற எண்ணை எட்டியுள்ளது.
இந்தப் படத்துக்கு முன்னதாக 'பாகுபலி 2' 22.7 என்ற எண்ணையும், 'பாகுபலி' 21.8 என்ற எண்ணையும் எட்டியது. இந்த இரண்டையும் 'சரிலேரு நீக்கெவரு' தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போதைக்கு தெலுங்கு படங்களில் அதிக டி.ஆர்.பியைப் பெற்ற படம் என்ற சாதனையை 'சரிலெரு நீக்கெவரு' பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனையை 'சரிலெரு நீக்கெவரு' படக்குழுவினரும், மகேஷ் பாபு ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.