காவல்துறையினர் அடிப்பதைப் புகாராக சொல்லக்கூடாது என்று மலையாள நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. இதனால், பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசுகள் எடுத்து வருகிறது.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், வெளியே வரும் மக்களையும் காவல்துறையினர் எச்சரித்தும், தடியடி நடத்தியதும் வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.
இதனிடையே ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பயன்படுத்துவதைப் பற்றி சுரேஷ் கோபி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் "கெட்ட வார்த்தைப் பேசுவதும், விதி மீறுபவர்களை உடலில் எந்த உறுப்பையும் பாதிக்காமல் அடிப்பதும் தவறல்ல. சிலர் அடித்தால் மட்டுமே திருந்துவார்கள். இதையெல்லாம் புகார் சொல்லக்கூடாது. காவல்துறை மீது முதல்வர் நிறையக் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். மேலும் அவர்களது ஈடற்ற சேவைகளுக்கு அவர்களை நாம் வணங்க வேண்டும். அவர்களின் பணியை விமர்சிப்பவர்களை அறைய வேண்டும்.
அவர்கள் நமக்காகப் பணி புரிகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கைமீறிச் சென்றால் ராணுவம் வரவழைக்கப்படும். அவர்களுக்கு மலையாளி, தமிழன், மற்ற மொழி பேசுபவர்கள் என்ற எந்த வித்தியாசமும் கிடையாது. அவர்களுக்கு எல்லாரும் மனிதர்கள் தான். இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கும் என் சக மக்களை எச்சரிக்க உரிமை உண்டு. காவல்துறைக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் கோபி