'லூசிஃபர்' படம் வெளியாகி ஓர் ஆண்டு ஆனதையொட்டு, முதல் நாள் அனுபவத்தை நினைவு கூர்ந்துள்ளார் நடிகர் பிரித்விராஜ்
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார், டொவினோ தாஸ், விவேக் ஓபராய், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'லூசிஃபர்'. மலையாளத் திரையுலகில் இந்தப் படத்துக்கு முன்பாக இருந்த அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்தது. 2019-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
இதன் 2-ம் பாகம் 'எம்புரான்' என்ற பெயரில் தயாரிப்பில் இருக்கிறது. கதை முடிவாகிவிட்டாலும், திரைக்கதை உள்ளிட்ட முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 1 வருடம் ஆகிறது.
இதனைத் தொடர்ந்து தான் இயக்குநராக அறிமுகமான படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தது குறித்து நினைவு கூர்ந்துள்ளார் பிரித்விராஜ். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"கடந்த வருடம், இதே நேரத்தில், லூசிஃபர் படத்தை ஒவ்வொரு திரையிடு தளத்துக்கும் அனுப்பி வைத்தோம். அதில் ஒவ்வொன்றையும் பார்த்தோம். 3 மாத நீண்ட, ஓய்வில்லாத, இரவு பகல், பின் தயாரிப்பு வேலைகள் முடிந்த தருணம் அது. எனது ஒளிப்பதிவாளர், துணை இயக்குநர்கள், படத்தொகுப்பாளர், இசை வடிவமைப்பாளர், டிஐ கலைஞர் மற்றும் கிராஃபிக்ஸ் கலைஞர்கள் தொடர் ஆதரவில்லாமல் என்னால் முடித்திருக்கவே முடியாது.
ஒரு வருடம் கழித்து, உலகம் வித்தியாசமாக இருக்கிறது. நான் 30 கிலோ எடை குறைத்திருக்கிறேன். சூழல் கடினமாக இருக்கிறது. உங்களை உத்வேகப்படுத்தும் நினைவுகள் தான் எப்போதும் முக்கியம் என நினைக்கிறேன். அடுத்த நாள் காலை தூக்கமின்றி, கலக்கமான நிலையில் நானும் சுப்ரியாவும் எர்ணாகுளத்தில் இருக்கும் கவிதா திரையரங்கில் எனது முதல் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கச் சென்றோம்.
அவ்வளவு பெரிய கூட்டத்தின் நடுவில் லாலேட்டன் (மோகன்லால்) எங்களுடன் இணைந்து படம் பார்த்ததன் மூலம் என் வாழ்நாளில் மிகச்சிறந்த ஆச்சரியங்களில் ஒன்றைத் தந்தார். இதுவரை சினிமாவில் ஒரு நீண்ட பயணமாக இருந்திருக்கிறது. ஆனால் 28/03/19, நான் சாகும்வரை விசேஷமானதாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்"
இவ்வாறு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜோர்டன் நாட்டில் 'ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் பிரித்விராஜ். பல்வேறு இடர்பாடுகளைத் தாண்டி படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.